எத்தனைக் கோடி கடனோ? என்னென்ன ஊழலோ? எகிறும் எதிர்பார்ப்பு... இன்று வெளியாகிறது மின்சாரத்துறையின் முழு வெள்ளை அறிக்கை!
என்னென்ன ஊழல்? எத்தனைக் கோடி கடன் நிலுவையில் இருக்கிறது? பள்ளிக் கல்வித்துறையில் பார்ட்டி பண்ட் தமிழக அரசியலில் கலவரத்தையும், பரபரப்பையும் பற்ற வைத்தது போல மின்சாரத்துறையில் செந்தில்பாலாஜி டார்கெட் செய்யப்படுகிறாரா? என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதே சமயம் நிஜமாகவே பொதுத்துறை நிறுவனங்களில் இத்தனைக் கோடி கடனை வைத்துக் கொண்டு 100 யூனிட், 200 யூனிட் மின்சாரம் எதற்காகத் தர வேண்டும்? போக்குவரத்து துறையில் இத்தனைக் கோடி கடனிருக்கையில், இலவசப் பேருந்து திட்டம் ஏன்? என்கிற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் மின்சாரத் துறை முற்றிலும் உருக்குலைந்து போய்விட்டதாக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற மின்சார வாரிய ஊழியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், மின்துறையின் தற்போதைய நிலை மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "மின்சார வாரியத்தின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவும், வேலைப்பளுவைக் குறைக்கவும் காலியாக உள்ள 15,000 பணியிடங்களை விரைந்து நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கோப்பினை முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு சென்றபோது, இளைஞர்களின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு வெறும் 30 நிமிடங்களில் அவர் இதற்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார்" என்று குறிப்பிட்டார்.

கடந்த கால ஆட்சியில் மின்சாரத் துறையில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகள், கடன் சுமைகள் மற்றும் உள்கட்டமைப்புப் பாதிப்புகள் குறித்துப் பேசிய அமைச்சர், ஒட்டுமொத்த மின்துறை தொடர்பான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய விரிவான வெள்ளை அறிக்கை இன்று (ஜூன் 25) முறைப்படி பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
மின்சார வாரியத்தை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுத்து, மக்களுக்குத் தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை வழங்குவதற்கான தொலைநோக்குத் திட்டங்கள் அந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் எனத் தெரிகிறது. அமைச்சரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும், மின்வாரிய வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
