மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?!

 
மகளிர் உரிமைத் தொகை

தமிழகத்தின் மிகப்பெரிய சமூக நலத்திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை மற்றும் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டங்களின் நிதி ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகியுள்ளன.

அரசுத் தரப்பிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரப்பூர்வ நிதிநிலை மற்றும் கொள்கை விளக்கக் குறிப்புகளின்படி, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இந்த இரண்டு பிரதான சிறப்புத் திட்டங்களுக்கு மட்டும் ஆண்டுக்குச் சுமார் ரூ.25,000 கோடி நிதி செலவிடப்படுகிறது. 

தமிழகத்தில் உள்ள தகுதியுடைய சுமார் 1.15 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கும் இந்த மெகா திட்டத்திற்காக மட்டும் ஆண்டுக்குச் சுமார் ரூ.21,000 கோடி வரை நிதி செலவிடப்படுகிறது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றிப் பயணிக்கும் இத்திட்டத்திற்கான மானியத் தொகையாகப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்கும் நிதி ஒதுக்கீடு, நடப்பு நிதியாண்டில் ரூ.4,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

உதவித்தொகை உரிமைத்தொகை நிதியுதவி தவெக விஜய்

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள வேளையில்,  தவெக அரசு பொறுப்பேற்ற மே மற்றும் நடப்பு ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையாக, முந்தைய திமுக அரசு வழங்கி வந்த அதே ரூ.1,000 மட்டுமே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்குத் தங்கு தடையின்றி நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது தவெக மகளிர் நலனுக்காக அறிவித்த 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' (உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துதல்) குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மகளிர் உரிமைத்தொகை

தற்போதைய நிலவரப்படி மாத உதவித்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தினால், இத்திட்டத்திற்கான ஆண்டுச் செலவு ரூ.21,000 கோடியிலிருந்து சுமார் ரூ.35,000 கோடிக்கு மேல் அதிகரிக்கும்.

மாநிலத்தின் தற்போதைய நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் சுமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், தவெக அரசு இந்த உயர்வுத் திட்டத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வருகிறது. எனவே, தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் ரூ.2,500 முழுமையாக வழங்க இன்னும் சில மாதங்கள் கால அவகாசம் ஆகலாம் எனத் தலைமைச் செயலக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.