ருசியான கூழ் செய்வது எப்படி? - ஆன்மிக முக்கியத்துவம், மருத்துவ நன்மைகளும்!

 
ஆடி அம்மன் கூழ்
ஆடி அம்மன் கூழ்

ஆடி மாதத்தில் தமிழ்நாட்டின் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை வீதிதோறும் மணக்கும் ஒரு தெய்வீக உணவு ஆடி கூழ். அம்மனுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்பட்டுப் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் இந்த ஆடி கூழ், வெறும் ஆன்மீகக் குறியீடு மட்டுமல்லாமல், அறிவியல் பூர்வமான பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது.

அம்மனுக்கு உகந்த நைவேத்தியம்: ஆடி மாதத்தில் வீசும் வெப்பக் காற்றினாலும், பருவகால மாற்றத்தினாலும் உடலில் வெப்பம் அதிகரிக்கும். மாரியம்மன், சீதளாதேவி போன்ற அம்மன் தெய்வங்களைச் சாந்தப்படுத்தவும், மக்களின் உஷ்ணத்தைத் தணிக்கவும் ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் வார்த்து வழிபாடு செய்யப்படுகிறது.

சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்று கூடி, கோயில்களில் கூழ் காய்ச்சி ஊர் மக்களுக்குத் தானமாக வழங்குவது ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறது.

ஆடி அம்மன் கூழ்

தேவையான பொருட்கள்

கேழ்வரகு (ராகி) மாவு: 2 கப்

பச்சரிசி நொய் (அரிசி குருணை): 1/2 கப்

கெட்டி மோர் அல்லது தயிர்: 2 கப்

சின்ன வெங்காயம்: 10 to 15 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய்: 2 (பொடியாக நறுக்கியது)

வேப்பிலை & கொத்தமல்லி: தேவையான அளவு

உப்பு: தேவையான அளவு

ஆடி அம்மன் கூழ்

பாரம்பரிய செய்முறை

கூழ் செய்வதற்கு முதல் நாள் இரவே, கேழ்வரகு மாவைச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்குப் பிசைந்து மூடி வைத்து புளிக்க விட வேண்டும். குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் புளிக்க வேண்டும். மறுநாள் காலையில், ஒரு பெரிய பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து, கழுவிய பச்சரிசி நொய்யைச் சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும்.

அரிசி நன்றாக வெந்ததும், புளிக்க வைத்த கேழ்வரகு மாவைக் கரைசலாக மாற்றி, பாத்திரத்தில் ஊற்றித் தொடர்ந்து கிளற வேண்டும். மாவு அடிபிடிக்காமல், கெட்டிப்பட்டு பளபளப்பான பதம் வரும் வரை நன்றாக வேகவைத்துக் ஆறவிட வேண்டும். கூழ் நன்றாக ஆறின பிறகு, அதில் தேவையான அளவு கெட்டி மோர், உப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை மற்றும் வேப்பிலை சேர்த்து நன்றாகக் கரைக்க வேண்டும்.

கேழ்வரகு மற்றும் மோர் இயற்கையிலேயே உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஆடி மாதத்தில் ஏற்படும் கோடைக்கால உஷ்ணத்தைக் கட்டுப்படுத்த இது சிறந்த பானமாகும்.

முதல் நாள் இரவே மாவைப் புளிக்க வைப்பதால், அதில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திச் செரிமானத்தைச் சீராக்குகிறது. இதில் சேர்க்கப்படும் சின்ன வெங்காயம், மோர் மற்றும் வேப்பிலை ஆகியவை தொற்றுநோய்களில் இருந்து உடலைப் பாதுகாத்து எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

கேழ்வரகில் அதிகளவிலான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது எலும்புகளை வலுப்படுத்துவதோடு, நாள்முழுவதும் புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் தருகிறது.