பழனி ரூ.100 கோடி கோவில் நிலம் அபகரிக்கப்பட்டது எப்படி? வெளியானது பத்திரம்!

 
பழனி நில அபகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் அமைந்த தண்டபாணி சுவாமி மடத்தின் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்குத் தனியாருக்குக் கிரையம் செய்யப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகித் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பழனி முருகன் கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு, முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது குறித்து விரிவான சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள அந்தப் போலி விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகி உள்ளது.

பழனி நில அபகரிப்பு

தனியார் அறக்கட்டளையாகச் சித்தரிப்பு: பழனி முருகன் கோவில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி மடத்தை ஒரு 'தனியார் அறக்கட்டளை' என்று பத்திரத்தில் தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலத்தின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் தர்ம காரியங்களைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிலத்தை விற்பனை செய்வதாகக் ஆவணத்தில் பொய்யான காரணத்தைக் காட்டியுள்ளனர்.

சந்தை மதிப்பு ரூ.100 கோடி கொண்ட மிக முக்கியமான இடத்திற்கு, வாங்குபவர் கேட்கும் ரூ.2 கோடியே 'அதிகப்படியான விலை' என்று பத்திரத்தில் குறிப்பிட்டு நிலத்தை அடிமாட்டு விலைக்குக் கைமாற்றியுள்ளனர். கடந்த மார்ச் 27-ஆம் தேதியே விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்துப் பெறப்பட்டு, ஜூன் 6-ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்:

பழனி நில அபகரிப்பு

பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பள்ளி ஆசிரியர் முருகதாஸ் (விழுப்புரம்), வெள்ளத்துரை (உடுமலை) மற்றும் சேதுபதி (பழனி) ஆகிய 4 பேர் மீது முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நில மோசடி விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்டப் பதிவாளர் சசிகலா ஆகிய இரு உயர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், இந்தச் சட்டவிரோதப் பத்திரப்பதிவு செல்லாது என ரத்து செய்யப்பட்டது.

பழனி நில அபகரிப்பு

வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த நில மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது திண்டுக்கல்லில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி எஸ்பி சஜிதா மற்றும் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான 5 மாவட்டங்களைச் சேர்ந்த சிறப்புப் படை போலீசார், இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகளைக் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.