புதிதாக திருமணமான இளம்பெண்ணிடம் HR கேட்ட கேள்வி... சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
வேலைவாய்ப்பு நேர்காணலில் கலந்து கொண்ட புதிதாக திருமணமான பெண் ஒருவரிடம், மனிதவளத் துறை அதிகாரி கேட்ட தேவையற்ற தனிப்பட்ட கேள்வி, இணையதளங்களில் மிகப்பெரிய சர்ச்சை மற்றும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சதகஷி திவேதி என்ற பெண்மணி, தான் சந்தித்த நேர்காணல் அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேர்காணலின் தொடக்கத்தில், அவர் வசிக்கும் இடம் மற்றும் அலுவலகத்திற்கு வந்து செல்வது குறித்த வழக்கமான கேள்விகளே கேட்கப்பட்டன. அதற்கு அவர், தனது கணவரும் அதே பகுதிக்குத் தான் தினமும் பயணிக்கிறார் என்பதால் போக்குவரத்து ஒரு பிரச்னையல்ல என்று இயல்பாகப் பதிலளித்துள்ளார்.

சதகஷிக்கு சமீபத்தில் தான் திருமணமாகியுள்ளது என்பதை அறிந்தவுடன் HR அதிகாரியின் அணுகுமுறை முற்றிலும் மாறியுள்ளது. நேர்காணலின் மையக்கருவிலிருந்து விலகிய அந்த அதிகாரி, "உங்களுக்கு இதைக் கேட்பதில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, என்றாலும் கேட்கிறேன்... உங்களுக்கு இப்போதைக்குக் குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லையே?" என்று நேரடியாகக் கேட்டுள்ளார்.
நேர்காணல்களில் தகுதி மற்றும் திறமையை மதிப்பிடாமல், பெண்களின் தனிப்பட்ட குடும்பத் திட்டமிடல் குறித்துக் கேள்வி எழுப்பும் இத்தகைய கலாச்சாரத்திற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல பெண் பயனர்கள், திருமணமாகாத பெண்களிடம் திருமணத்தைப் பற்றியும், திருமணமான பெண்களிடம் குழந்தைகள் பற்றியும், தாய்மார்களிடம் வேலை-குடும்பச் சமநிலை பற்றியும் தொடர்ந்து இதுபோன்ற சங்கடமான கேள்விகள் கேட்கப்படுவதாகத் தங்களது சொந்த அனுபவங்களை ஆதங்கத்துடன் பகிர்ந்துள்ளனர்.
பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவம் குறித்துப் பேசும் நிறுவனங்களே, இதுபோன்ற பாலின அடிப்படையிலான அநாகரிகமான கேள்விகளை எழுப்புவது முரண்பாடாக உள்ளது என்று சதகஷி சுட்டிக்காட்டியுள்ளார். தனிப்பட்ட உரிமைகளைப் பாதிக்கும் இத்தகைய சட்டவிரோதமான நடைமுறைகள் மாற வேண்டும் என்றும், பெண்களின் தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
