இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு... எச்-1பி விசா கட்டண உயர்வை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து அமெரிக்கா அறிவிப்பு!
அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தி கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, தற்போது மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியேற்றம் தொடர்பாகப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா கட்டணத்தை 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் டாலர்களில் இருந்து அதிரடியாக உயர்த்தி 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.95 லட்சம்) நிர்ணயித்து உத்தரவிட்டார். இந்த விசா கட்டண உயர்வை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த பல்வேறு மாகாண நீதிமன்றங்கள் தடை விதித்த நிலையில், அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த எச்-1பி விசா கட்டண உயர்வு உத்தரவு நடப்பு மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில், வெளிநாட்டு ஊழியர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் மீதான இந்த 1 லட்சம் டாலர் கட்டணத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விசா கட்டண உயர்வு நடவடிக்கையானது அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க ஊழியர்கள் மற்றும் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புச் சந்தையில் அதிக வாய்ப்புகளை மேம்படுத்தவும், அவசியமான மற்றும் மிக உயர்ந்த திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களை மட்டுமே நிறுவனங்கள் பணியமர்த்துவதை இது உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் எச்-1பி விசா திட்டத்தின் மூலம் அதிகளவில் இந்தியர்கள் பயனடைந்து வரும் சூழலில், இந்த விசா கட்டண உயர்வு நீட்டிப்புத் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த உயர்வின் காரணமாகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எச்-1பி விசா பதிவு எண்ணிக்கையில் சுமார் 92 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
