மனுஷங்களாடா... ரோட்டில் கவிழ்ந்த பால் டேங்கர் லாரி... காப்பாற்றாமல் போட்டிப்போட்டுப் பாத்திரங்களில் பாலை பிடித்துச் சென்ற பொதுமக்கள்!

 
டேங்கர் லாரி பால்

மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டம் அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பால் டேங்கர் லாரியிலிருந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய பாலை அப்பகுதி மக்கள் வாளி மற்றும் குடங்களுடன் திரண்டு போட்டி போட்டுப் பிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் இருந்து விரார் நோக்கி அமுல் நிறுவனத்திற்குச் சொந்தமான பால் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம், தவா கிராமத்தின் அருகே மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, பிற்பகல் 3 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கரின் மேல்பகுதி உடைந்து சேதமடைந்ததால், அதிலிருந்த நூற்றுக்கணக்கான லிட்டர் பால் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.


நெடுஞ்சாலையில் பால் ஆறாக ஓடுவதைக் கண்ட அக்கம் பக்கத்து கிராம மக்களும், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் உடனடியாக அங்குத் திரண்டனர். தங்கள் வீடுகளில் இருந்து குடங்கள், வாளிகள், அண்டாக்கள் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்களை எடுத்துவந்து, சாலையில் தேங்கி ஓடிய பாலை போட்டி போட்டுப் பிடித்துச் சென்றனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காசா காவல்துறையினர், பாலைப் பிடிக்கத் திரண்ட பொதுமக்களை அப்புறப்படுத்திவிட்டு, கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை மீட்டு அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினாலும், மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.