நிலவைச் சுற்றும் மனிதர்கள்.. ஆர்டெமிஸ் II பயணத்தை மொபைலிலேயே நேரலையில் பார்க்கலாம்! நாசா அறிமுகப்படுத்திய 'AROW' இணையதளம்!

 
நிலா ஆர்டெமிஸ் II நாசா AROW நிலா ஆர்டெமிஸ் II நாசா AROW

விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்லாகக் கருதப்படும் நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டம் நிலவை நோக்கிப் பயணிக்கத் தயாராகியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணத்தை உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் வசதியை நாசா ஏற்படுத்தியுள்ளது.

அரை நூற்றாண்டிற்குப் பிறகு மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் 'ஆர்டெமிஸ் II' திட்டத்தை, பொதுமக்கள் தங்கள் மொபைல் மற்றும் கணினி வழியாக நிகழ்நேரத்தில் பின்தொடர நாசா அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக AROW (Artemis Real-time Orbit Website) என்ற பிரத்யேகத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாசாவின் ஓரியன் விண்கலத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி வர உள்ளனர். சுமார் 10 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தின் போது, விண்வெளி வீரர்கள் ஆழ்விண்வெளிச் சூழலில் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதையும், விண்கலத்தின் பாதுகாப்பு அமைப்புகளையும் நாசா சோதிக்கவுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் எதிர்காலத் திட்டத்திற்கு இதுவே அடிப்படை அஸ்திவாரம்.

நிலா ஆர்டெமிஸ் II நாசா AROW

பொதுமக்கள் www.nasa.gov/trackartemis என்ற இணையதளம் அல்லது NASA App வழியாக ஓரியன் விண்கலத்தைக் கண்காணிக்கலாம். இதில் விண்கலம் பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது? நிலவிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? பயணத்தின் வேகம் என்ன? போன்ற விபரங்களை உடனுக்குடன் அறியலாம்.

மொபைல் செயலியில் உள்ள ஏ.ஆர் (AR) வசதி மூலம், உங்கள் இருப்பிடத்திலிருந்து வானில் ஓரியன் விண்கலம் இப்போது எந்தத் திசையில் இருக்கிறது என்பதை உங்கள் மொபைலை நகர்த்துவதன் மூலம் துல்லியமாகக் கண்டறியலாம்.

பூமி மற்றும் சந்திரனைப் பொறுத்து விண்கலம் பயணிக்கும் பாதையை 3D வரைபடமாகப் பார்க்கலாம். மேலும், பழைய அப்பல்லோ திட்டங்கள் நிலவில் தரை இறங்கிய இடங்களையும் இதில் காணலாம்.

ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு விண்கலம் அனுப்பும் அதே தரவுகளை நாசா பொதுமக்களுக்கும் வழங்குகிறது. இதன் மூலம் கலைஞர்கள் மற்றும் மென்பொருள் உருவாக்குநர்கள் தங்களின் சொந்தக் கண்காணிப்புச் செயலிகளை உருவாக்கலாம். இந்தத் தரவைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் வீட்டுத் தொலைநோக்கி  மூலமாகவோ அல்லது விண்வெளி மென்பொருட்கள் மூலமாகவோ ஓரியன் விண்கலத்தைத் துல்லியமாகத் தேடிக் கண்டறியலாம்.

நிலா ஆர்டெமிஸ் II நாசா AROW

ஏவப்பட்ட ஒரு நிமிடத்திலிருந்து, ஓரியன் விண்கலம் மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் வரை இந்தத் தரவுகள் இடைவிடாமல் வழங்கப்படும். ஓரியன் ராக்கெட்டின் மேல் பகுதியிலிருந்து பிரிந்த 3 மணி நேரத்திற்குப் பிறகு மொபைல் டிராக்கிங் வசதி முழுமையாகச் செயல்படத் தொடங்கும்.

மனிதகுலம் நிலவில் நீண்டகாலம் தங்குவதற்கும், அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்குப் பயணிப்பதற்கும் நாசா எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முயற்சியில், நாமும் ஒரு அங்கமாக இணைய இது ஒரு அறிய வாய்ப்பாகும்.