முதல்வரின் தனிப்பிரிவில் மனு தர முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள்!

 
முதல்வர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் தங்களது கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். எனினும், கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகப் பலர் மனு அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேற்று அதிகாலை முதலே முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலக வாயிலில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்: விடிவதற்கு முன்பே மக்கள் திரண்டதால், தலைமைச் செயலக வளாகத்திற்கு வெளியே சுமார் 200 மீட்டருக்கும் மேல் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து நின்றனர். தலைமைச் செயலகத்தின் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கடுமையான பாதுகாப்புத் தணிக்கைகள் காரணமாக, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொதுமக்கள் மட்டுமே டோக்கன் அடிப்படையில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகள், நிலத் தகராறுகள் மற்றும் அவசர உதவிகள் குறித்த மனுக்களோடு வந்திருந்த முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் வெயிலிலும் நீண்ட நேரம் காத்திருந்தனர். உயரதிகாரிகளிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் தங்களது மனுக்களை நேரில் வழங்கினால் மட்டுமே விரைவான மற்றும் உறுதியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் வந்திருந்தனர். ஆனால், மதியத்திற்கு மேல் நேரம் கடந்தும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காததால், நீண்ட தூரத்திலிருந்து வந்திருந்த ஏழை எளிய மக்கள் பலர் மிகுந்த ஏமாற்றத்துடனும் மனவேதனையுடனும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர்.

பொதுமக்கள் மனு அளிக்கும் இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், கூடுதல் கவுண்ட்டர்களைத் திறந்து மனுக்களைப் பெற்றுக்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.