அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் வீதியில் போராட்டம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் எடுக்கப்பட்டு வரும் அதிரடி முடிவுகள் மற்றும் ஈரான் மீதான போர் நடவடிக்கைகளைக் கண்டித்து, அமெரிக்கா முழுவதும் சுமார் 90 லட்சம் மக்கள் பங்கேற்ற பிரம்மாண்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் போர்ச் சூழலை நிறுத்தக் கோரிப் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். போர் காரணமாக அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலன் 3.60 டாலராக உயர்ந்துள்ளது. இது உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கக் குடியேற்றத் துறை (ICE) நடத்தி வரும் அதிரடிச் சோதனைகள் மற்றும் அதில் நேரிட்ட உயிரிழப்புகளைக் கண்டித்து 'எண்ட் ஐஸ்' என்ற வாசகங்களுடன் மக்கள் திரண்டனர். உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கவும், மாற்றுப் பாலினத்தவர் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்தப் பேரணிகளில் வலியுறுத்தப்பட்டது.
வழக்கமான போராட்டங்களைப் போலன்றி, நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் இசை, பாடல் மற்றும் நடனங்களுடன் மக்கள் அணிவகுத்தனர். பிரபல ராக் கலைஞர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் போராட்டங்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டங்களை "டிரம்ப் எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களின் சிகிச்சை முகாம்" என வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது. மேலும், எண்ணெய் விலை உயர்வு அமெரிக்காவிற்குப் பொருளாதார ரீதியாகப் பயன் தரும் என டிரம்ப் கூறிய கருத்து போராட்டக்காரர்களை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
