மரத்தில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை... தவிக்கும் பெண் பிள்ளைகள்!

 
தூக்கிட்டு தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே, தீராத நோய் மற்றும் வறுமை காரணமாகக் கணவன், மனைவி இருவரும் இடுகாட்டிலேயே தற்கொலை செய்துகொண்ட நெஞ்சைப் பிழியும் சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்களைப் பாதுகாத்த பெற்றோரை ஒரே நாளில் இழந்த இரண்டு பெண் பிள்ளைகள் தற்போது ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சோளிங்கர் அடுத்த நீலகண்ட ராயன் பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (45). கூலித் தொழிலாளியான இவருக்கு, சுகன்யா (40) என்ற மனைவியும், கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் வயதில் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

ராஜாவின் மனைவி சுகன்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காகப் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கூலித் தொழிலாளியான ராஜாவுக்கு, மனைவியின் மருத்துவச் செலவுகளைக் கவனிப்பது பெரும் சுமையாக இருந்துள்ளது. ஒருகட்டத்தில் போதிய வருமானம் இன்றி சிகிச்சையைத் தொடர முடியாமலும், மனைவியின் வலியைத் தாங்கிக்கொள்ள முடியாமலும் ராஜா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக, ராஜா மற்றும் சுகன்யா ஆகிய இருவரும் வாலாஜா - சோளிங்கர் சாலையில் உள்ள ஒரு இடுகாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு இருவரும் மரம் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். தகவலறிந்து வந்த சோளிங்கர் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தத் தம்பதிக்கு 19 வயதில் கல்லூரியில் படித்து வரும் ஒரு மகளும், +2 படித்து வரும் ஒரு மகளும் உள்ளனர்.

படிப்பில் ஆர்வம் கொண்ட இந்த இரு பெண் பிள்ளைகளும், தந்தை மற்றும் தாயை ஒரே நேரத்தில் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்த அச்சம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது என்றாலும், வறுமையின் பிடியில் சிக்கி உயிரிழந்த இந்தத் தம்பதியின் பிள்ளைகளுக்குத் தமிழக அரசும், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகமும் உரிய நிதியுதவி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவச் செலவுகளால் ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொள்வது சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுகிறது. இதுபோன்ற சூழலில் இருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் 'முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' மூலம் சிகிச்சை அளிக்க வழிவகை உள்ளது. எனினும், முறையான விழிப்புணர்வு இல்லாமையும், அன்றாட வாழ்வாதாரப் போராட்டமும் இவர்களை இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது.