இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி கோர விபத்து.. கல்யாணத்திற்கு சென்ற கணவன் மனைவி பரிதாபமாக பலி..!!

 
கொத்தம்பாடி விபத்து

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி  சேலம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  இருசக்கர வாகனம் மீது  தனியார் பேருந்து மோதிய விபத்தில் கணவன் மனைவி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி. பொதுமக்கள் சாலைமறியல்  போராட்டத்தால் சுமார் இரண்டு மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள தம்மம்பட்டி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (60) இவரது மனைவி விமலா ராணி. இருவரும்  ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைப்பெறும் தனது சித்தப்பா வழி தங்கை மகன் திருமணத்திற்கு தனது  எலக்ட்ரிக் ஸ்கூட்டி வண்டியில் கணவன், மனைவி இருவரும் வந்து கொண்டிருந்துள்ளனா். அப்போது கொத்தம்பாடி பகுதியில் மண்டபத்தின் எதிரே வாகனத்தை திருப்பிய போது  ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோகன்ராஜியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கணவன் மனைவி இருவரும் பேருந்தின் அடியில் சிக்கி உடல் சிதறி இருவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கொத்தாம்பாடி கிராம மக்கள்  இப்பகுதியில் தொடர் விபத்து  ஏற்பட்டு வருகிறது இதனால் இப்பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறை,வருவாய் துறை, காவல் துறையினரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி  சாலை மறியல் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி மேம்பாலும் அமைக்கவும், தற்போது தற்காலிக  தடுப்புகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தங்கை மகன் திருமணத்திற்கு சென்ற கணவன் மனைவி மண்டபம் எதிரிலேயே இருவரும் விபத்தில் பலியான சம்பவத்தால் திருமண மண்டபத்தில் உள்ள உறவினர்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web