பயங்கரம்... மனைவியை அடித்துக் கொன்று கணவன் தற்கொலை முயற்சி!

 
கடலூர் கடலூர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் தனது மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த அன்பரசன் (55) என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

இன்று காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அன்பரசன் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்துத் தனது மனைவியின் தலையில் பலமாகத் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தனது மனைவியைக் கொன்ற அதிர்ச்சியிலும், காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்குப் பயந்தும் அன்பரசன் வீட்டில் இருந்த விஷத்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார்.

அன்பரசன் மயங்கிக் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.