சோகம்... கிணற்றில் குதித்த மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவர் பாறையில் மோதி பலி!

 
vellore vellore

 

 

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கிணற்றில் குதித்த மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பார்த்திபன் (30). இவருக்குப் பிரேமகுமாரி (28) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பார்த்திபனுக்கு இருந்த குடிப்பழக்கம் காரணமாகத் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஆம்புலன்ஸ்

நேற்று முன்தினம் இரவு மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, இதனால் மனவேதனை அடைந்த பிரேமகுமாரி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் அருகில் இருந்த கிணற்றில் குதித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பார்த்திபன், மனைவியை மீட்க உடனடியாகக் கிணற்றில் குதித்தார். ஆனால், எதிர்பாராத விதமாகப் பார்த்திபன் கிணற்றுக்குள் இருந்த பாறையில் மோதி மயங்கி தண்ணீரில் மூழ்கினார்.

போலீஸ்

பிரேமகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் குதித்து அவரை உயிருடன் மீட்டனர். தகவல் அறிந்து வந்த ஒடுகத்தூர் தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பார்த்திபனின் உடலைப் பிணமாக மீட்டனர். வேப்பங்குப்பம் போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.