கணவனுக்கு 3 மணி நேரம் கரண்ட் ஷாக், விஷம் கொடுத்துக் கொடூரக் கொலை... அதிர வைக்கும் வாக்குமூலம்!

 
up up

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் நகரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி தனது தங்கை மற்றும் கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினரின் இல்லற வாழ்க்கை, மனைவியின் தவறான உறவினால் தற்பொழுது கொடூரமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. அஞ்சல் என்ற அந்தப் பெண், தனது தங்கை சிகா மற்றும் அவர்களது கள்ளக்காதலர்களான அங்கித், அஜய் ஆகியோருடன் இணைந்து இந்தத் திட்டமிட்ட கொலையை அரங்கேற்றியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இக்கொலை சம்பவம் உடனடி ஆத்திரத்தில் நடந்தது அல்ல என்றும், மிகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று இரவு, பாதிக்கப்பட்ட கணவனை நான்கு பேரும் சேர்ந்து கயிற்றால் கட்டிப்போட்டு, சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க அவரது வாயில் துணியைத் திணித்ததோடு, கொடூரத்தின் உச்சமாக அவருக்குப் பலமுறை மின்சார அதிர்ச்சியும்  கொடுத்துள்ளனர். அதோடு நிற்காமல், அந்த இளைஞருக்குக் கட்டாயப்படுத்தி விஷத்தையும் வாயில் ஊற்றியுள்ளனர்.

இதன்பின்னர், இந்தத் திட்டமிட்ட கொலையைத் தற்கொலை அல்லது விபத்து போலக் காட்டுவதற்காக, கணவனின் உடலை மாடிப் படிக்கட்டுகளிலிருந்து கீழே வீசியுள்ளனர். இதற்கிடையே, வீட்டை விட்டு இரண்டு மர்ம நபர்கள் ஓடுவதைக் கண்டு சந்தேகமடைந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, கொலையாளி மனைவியான அஞ்சல் ஏதேதோ காரணங்களைக் கூறி தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். எனினும், உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், கொடூரக் கொலையில் ஈடுபட்ட அஞ்சல், அவரது தங்கை மற்றும் கள்ளக்காதலர்கள் உட்பட 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.