சொந்த வீட்டிலேயே 25 சவரன் நகையை மறைத்து வைத்து நாடகமாடிய கணவன்!

 
தங்கம் திருட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சொந்த வீட்டிலேயே 25 பவுன் தங்க நகைகளை மறைத்து வைத்துவிட்டு, நகைகள் திருட்டுப் போய்விட்டதாகக் காவல் நிலையத்தில் நாடகமாடிய கட்டிடத் தொழிலாளியைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்புவனம் அருகே உள்ள ஆனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி (55), கட்டிடத் தொழிலாளி. சங்கிலியும் அவரது மனைவி பூர்ணவள்ளியும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்துள்ளன. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகள் மாயமாகியிருந்தன. நகைகள் திருடப்பட்டு விட்டதாகப் பழையனூர் காவல் நிலையத்தில் சங்கிலி புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் மயில் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

நகை கொள்ளை

சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட காவல் துறை மோப்ப நாய் 'லைலா', வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் அந்த வீட்டையே மீண்டும் மீண்டும் சுற்றி வந்தது. மோப்ப நாயின் இந்தச் செயல் காவல்துறையினருக்குச் சங்கிலி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் கணவன் - மனைவி இருவரிடமும் காவல்துறையினர் தனித்தனியாகத் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையின் இடையே பூர்ணவள்ளி பழையனூர் காவல் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு, தனது கணவர் சங்கிலி தான் நகைகளை மறைத்து வைத்துள்ளார் என்ற உண்மையைத் தெரிவித்தார். உடனே வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், வீட்டின் அருகே இருந்த வைக்கோல் போருக்குள் (படப்பு) மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகளையும் பத்திரமாக மீட்டனர். சொந்த வீட்டிலேயே நகைகளைத் திருடி மறைத்து வைத்து விட்டுத் நாடகமாடிய சங்கிலியைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.