சொத்துக்காக கூலிப்படை ஏவி கணவன் கொலை... மனைவி, 3 மகள்கள் உட்பட 6 பேர் கைது!

 
கொலை

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சொத்து மற்றும் பணத்தைத் தராத ஆத்திரத்தில், கூலிப்படையை ஏவி கணவரைக் கொன்ற வழக்கில் மனைவி மற்றும் மூன்று மகள்கள் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொறையாறு அருகேயுள்ள இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பிய இவர், தனது மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவருடைய சொத்துக்களை அவரது சகோதரியின் மகனுக்கு எழுதிக் கொடுக்க இருந்ததாகக் கூறப்படுகிறது. 

சொத்து பத்திரம் ரிஜிஸ்ட்ரேஷன் ஆவணங்கள் பதிவுத்துறை

இதனால் தனக்குச் சொத்து கிடைக்காது என்ற ஆத்திரத்தில், தனது தாயார் சரஸ்வதி மற்றும் சகோதரிகளுடன் இணைந்து இளைய மகள் அட்சயா தேவி திட்டமிட்டுள்ளார். இதற்காகத் திருப்பூரைச் சேர்ந்த அட்சயா தேவியின் காதலரான கவுதம்குமார் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித்குமார் ஆகியோரிடம் ஐந்து லட்சம் ரூபாய் பேசி கூலிப்படையாக ஏவியுள்ளனர். கடந்த அக்டோபர் 15ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மகேந்திரனை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இந்தக் கொலையை மூடி மறைக்க, மகேந்திரனின் மகளான மகாலட்சுமி, தன்னைப் பிரிந்து வாழும் கணவர் பிரபாகரன் தான் தனது தந்தையைக் கொலை செய்துவிட்டுத் தப்பியதாகப் பொறையாறு காவல்துறையினரிடம் நாடகமாடித் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் கொலை நடந்த நேரத்தில் பிரபாகரன் பொறையாறு காவல் நிலையத்தில் வேறு ஒரு புகாரின் பெயரில் விசாரணைக்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆஜராகி இருந்தது காவல்துறையினருக்குத் தெரிய வந்துள்ளது. 

சொத்து பத்திரம்

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மகேந்திரனின் மனைவி சரஸ்வதி, மகள்கள் மகாலட்சுமி, கலைவாணி, அட்சயா தேவி மற்றும் கூலிப்படையாகச் செயல்பட்ட கவுதம்குமார், ரஞ்சித்குமார் ஆகிய ஆறு பேரும் சேர்ந்து திட்டமிட்டுக் கொலையை அரங்கேற்றியது அம்பலமானது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.