பகீர் சிசிடிவி காட்சிகள்... ரயில் நிலையத்தில் மனைவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டுக் கொன்ற கணவன்!
மும்பை மாநகரின் முலுந்த் ரயில் நிலையத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவர் ஒருவரே தனது மனைவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த புஷ்பா குப்தா என்பவருக்கும், அவரது கணவர் ராஜுகுமார் குப்தாவிற்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தனது சகோதரருடன் சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்திற்குச் செல்ல புஷ்பா முயன்றபோது, இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரயில் நிலையத்திற்குப் புறப்படும் முன் ஏற்பட்ட மோதலால், தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு புஷ்பா ரயில் ஏறச் சென்றுள்ளார். இதற்கிடையில், மறந்து வைத்த அடையாள அட்டையை எடுக்கத் தனது மகனுடன் வீட்டிற்குச் சென்ற புஷ்பாவின் சகோதரரை, ராஜுகுமார் நயவஞ்சகமாக வீட்டுக்குள் வைத்துப் பூட்டியுள்ளார். பின்னர் மின்னல் வேகத்தில் ரயில் நிலையத்திற்கு விரைந்த அவர், அங்குத் தனது மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆத்திரத்தின் உச்சியில் அங்கிருந்த ரயில் முன்பு அவரைத் தள்ளிவிட்டுள்ளார். இதில் புஷ்பா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகு தனது மகனை அழைத்துக் கொண்டு தலைமறைவான ராஜுகுமாரைப் பிடிக்கப் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் பதுங்கியிருந்த அவரை இன்று (மார்ச் 17) காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான ராஜுகுமாரிடம் இந்த கொடூரச் செயலுக்கான பின்னணி குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொலைச் சம்பவம் மும்பைவாசிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
