முதலிரவை வீடியோவாக பதிவு செய்து மனைவியை மிரட்டி வந்த கணவன் - மயிலாடுதுறையில் கொடூரம்!
மயிலாடுதுறை அருகே மனைவியின் முதலிரவு மற்றும் தனிப்பட்ட வீடியோக்களைக் காட்டி மிரட்டி வந்த கணவனைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த டிரைவர் அருண் (31) என்பவருக்கும், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், அருண் தாக்கியதில் படுகாயமடைந்த அவரது மனைவி சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், தனது கணவரின் செல்போனை ஆய்வு செய்த போது பல பெண்களுடன் அவர் தொடர்பில் இருந்ததும், அந்தத் தகாத காட்சிகளை வீடியோவாக எடுத்து வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், தங்களுக்கு நடந்த முதலிரவையும் வீடியோவாகப் பதிவு செய்து அதனை இணையதளத்தில் வெளியிடுவேன் என அவர் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த மங்கைமடம் சென்ற காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க, அருண் விஷ இலையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரந்துள்ளார். இதனால் போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்யாமல் திரும்பி வந்தனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியாவை நேரில் சந்தித்துப் புகார் அளித்தார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த அருணைப் போலீசார் தீவிரமாகத் தேடினார்; தொடர்ந்து அவரைப் கைது செய்த காவல்துறையினர், அவரது செல்போனைக் கைப்பற்றி அதில் உள்ள வீடியோ காட்சிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
