2வது மனைவியுடனான நெருக்கமான படங்களைக் காட்டி கணவர் சித்ரவதை! 2 மகன்களைக் கொன்று தாய் தற்கொலை!

 
மனைவி தற்கொலை மனைவி தற்கொலை

குடும்பத் தகராறு மற்றும் கணவரின் வக்கிரமான நடத்தையால், ஒரு இளம் தாய் தனது இரு பிஞ்சு குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாரங்கல் மாவட்டம் மாணிக்கம் தண்டாவைச் சேர்ந்த பிரவீன் - சிரவந்தி தம்பதியினர் பிழைப்பு தேடி ஐதராபாத் சென்றுள்ளனர். அங்கு வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்து வந்த நிலையில், பிரவீனுக்கும் அவரது அத்தை மகள் மகேஸ்வரிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

சிரவந்திக்குத் தெரியாமல் கடந்த ஆண்டு மகேஸ்வரியை பிரவீன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுத் தனியாகக் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த விபரம் சிரவந்திக்குத் தெரியவரவே, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தனது இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைச் சிரவந்தியிடம் காட்டி, பிரவீன் அவரைத் தொடர்ந்து மனரீதியாகச் சித்ரவதை செய்து வந்துள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

கணவரின் இத்தகைய நடத்தையால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சிரவந்தி, விடுதியில் தங்கிப் படித்து வந்த தனது இரண்டு மகன்களையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். "நான் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்" எனத் தனது சகோதரருக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியுள்ளார். தகவலறிந்து பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த சகோதரர், கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, இரண்டு மகன்களையும் தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டுச் சிரவந்தியும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த போலீசார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவர் பிரவீனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.