மனைவியுடன் தகாத உறவு - தவெக கிளை செயலாளரை அரிவாளால் வெட்டிய கணவர் காவல் நிலையத்தில் சரண்!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார் மங்கலம் கிராமத்தில் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட தவெக கிளை செயலாளரை அரிவாளால் வெட்டிய கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டார்மங்கலம் ஜே.ஜே.காலனியைச் சேர்ந்தவரும், தவெக கிளை செயலாளருமான லோகநாதன் (36) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி சூர்யா என்பவருடன் தகாத உறவு வைத்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த கணவர் பெருமாள் இருவரையும் கண்டித்துள்ளார்.
பெருமாள் எச்சரித்த போதிலும், லோகநாதன் தனது செல்போன் எண்களை மாற்றித் தொடர்ந்து சூர்யாவுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் நேற்று லோகநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குமுறிவு முற்றியதில் ஆத்திரமடைந்த கணவர் பெருமாள், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லோகநாதனைச் சரமாரியாக வெட்டினார். இதில் அவரது தலை மற்றும் கை விரல் பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது.
படுகாயமடைந்த லோகநாதனை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, தாக்குதலுக்குப் பயன்படுத்திய அரிவாளுடன் பாடாலூர் காவல் நிலையத்திற்குச் சென்ற பெருமாள் காவல்துறையினர் முன்னிலையில் சரணடைந்தார். அவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
