பூட்டிய வீட்டிற்குள் கணவன் சடலமாக மீட்பு - கோயிலுக்குச் சென்று திரும்பிய மனைவி அதிர்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் பகுதியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே படுத்திருந்த நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் வட்டத் தெருவைச் சேர்ந்த ஜெயசங்கர் (54) என்பவர், நேற்று மாலை குடிபோதையில் தனது மனைவியுடன் குடும்பப் பிரச்சினை காரணமாகத் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறுக்குப் பின்னர் வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு அவர் உள்ளே படுத்துக்கொண்டார். அந்த நேரத்தில் குடும்பத்தினர் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற பூஜைக்குச் சென்றுவிட்டனர்.
இரவு 8 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த மூத்த மகன் ஜெயபாரத் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ஜெயசங்கர் பாயில் சலனமற்று இறந்து கிடப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த புதியம்புத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸ்லின், ஜெயசங்கரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
