‘கணவரின் திருமணம் தாண்டிய உறவை மனைவி மீதான கொடுமை எனக் கருத முடியாது’ - உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

 
கள்ளக்காதல் உல்லாசம் காதல் தம்பதி ஹனி ட்ராப்

திருமணத்திற்கு மீறிய உறவில் கணவர் இருப்பதை மட்டுமே இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மனைவிக்கு இழைக்கப்படும் கொடுமையாகவோ அல்லது தற்கொலைக்குத் தூண்டுவதாகவோ கருத முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்குக் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு அந்தப் பெண் தனது ஒன்றரை வயதுக் குழந்தையுடன் வாய்க்காலில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்துப் பெண்ணின் கணவர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கணவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

கீழமை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். அதில், "திருமணத்திற்குப் பிறகும் மேலும் 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் கேட்டுத் தனது சகோதரியைக் கொடுமைப்படுத்தினர். அத்துடன் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவும் இருந்தது. இதனால்தான் தனது சகோதரி தற்கொலை செய்து கொண்டார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன், கணவரை விடுதலை செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.

உல்லாசம் மனைவி காதலி கள்ளக்காதல் கொலை

தீர்ப்பில் நீதிபதி குறிப்பிடுகையில், "கணவர் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தார் என்றே வைத்துக்கொண்டாலும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவின் கீழ் அதனை மனைவி மீதான கொடுமையாகக் கருத முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்த போது கணவர் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தார் என்பது மட்டுமே, மனைவி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குக் கொடுமை இழைக்கப்பட்டதாகக் கருத முடியாது என்றும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், கணவர் தரப்பில் வரதட்சணைக் கொடுமை இழைக்கப்பட்டதற்கோ அல்லது தற்கொலைக்குத் தூண்டியதற்கோ உரிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, கணவரின் விடுதலையை உறுதி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.