ஹைதராபாத்தில் கோர விபத்து! ஸ்கூட்டர் மீது சரிந்த இரும்புக் குழாய்கள் – 56 வயது நபர் பலி... பகீர் வீடியோ!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், அதிக பாரம் ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் அதிலிருந்த இரும்புக் குழாய்கள் ஸ்கூட்டரில் சென்ற நபர் மீது விழுந்தன. இந்தக் கோர விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வளைவில் திரும்பியபோது கவிழ்ந்த ஆட்டோ
தெலங்கானா மாநிலம் ஷாபூரைச் சேர்ந்தவர் பிரகாஷ் பவார் (56). இவர் தனது ஸ்கூட்டரில் தங்கம் உருக்கும் தொழில் தொடர்பாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஹைதராபாத்தின் பாலாநகர் மேம்பாலம் அருகே இரும்புக் குழாய்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று வந்தது.
மேம்பாலத்தின் அடியில் உள்ள வளைவில் வாகனம் திரும்பியபோது, அதிக பாரம் காரணமாக நிலைதடுமாறிக் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வாகனத்தில் இருந்த இரும்புக் குழாய்கள் அருகில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பிரகாஷ் பவார் மீது விழுந்தன.
சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இரும்புக் குழாய்கள் விழுந்ததில் பலத்த காயமடைந்த பிரகாஷ் பவார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் போக்குவரத்துப் போலீசார் கிரேன் உதவியுடன் கவிழ்ந்த வாகனத்தையும் சாலையில் சிதறிக் கிடந்த குழாய்களையும் அகற்றினர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஓட்டுநர் கைது
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர். அதிக பாரம் ஏற்றப்பட்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டதா, இதில் வாகனத்தின் உரிமையாளர் உள்ளிட்டோருக்குப் பொறுப்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றுவது மற்றும் சரக்குகளைப் பாதுகாப்பாகக் கட்டாமல் எடுத்துச் செல்வது எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
