23வது மாடியிலிருந்து விழுந்து 15 வயது மாணவி உயிரிழப்பு... போலீசார் விசாரணை!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே கோகாபேட் பகுதியில் 15 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நர்சிங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாதாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த லஸ்யா லஹரி என்ற மாணவி, கோகாபேட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை இரவு குடியிருப்பில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மாணவி கல்லூரிக்கு முறையாகச் செல்லாதது மற்றும் படிப்பில் கவனம் செலுத்தாதது தொடர்பாக வீட்டில் கண்டிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்பட்ட மனவருத்தம் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டாலும், இதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். மாணவியின் உயிரிழப்புக்கான முழுமையான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
