பகீர் சிசிடிவி வீடியோ... கணவருடன் சென்ற புதுமணப்பெண் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், திருமணமாகி ஒரு மாதமே ஆன இளம்பெண் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஹைதராபாத்தின் மலக்பேட் பகுதியில் உள்ள டி-மார்ட் சிக்னல் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. எல்.பி. நகர் பகுதியைச் சேர்ந்த லாவண்யா (25), தனது கணவர் ஸ்ரீகாந்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சிக்னல் அருகே வாகனம் நிலைதடுமாறியதில் இருவரும் சாலையில் விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் லாவண்யா பின்னால் வந்த பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருப்பது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாடர்ஹாட் போலீசார், லாவண்யாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பேருந்தையும் அதன் ஓட்டுநரையும் விசாரணைக்காகக் காவலில் எடுத்துள்ளனர்.விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
