சென்னை விமான நிலையத்தில் ரூ.5.26 கோடி மதிப்பிலான உயர்ரக ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா பறிமுதல்!
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து உணவுப் பொருட்கள் என்ற பெயரில் சூட்கேஸில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.5.26 கோடி மதிப்பிலான உயர்ரகக் கஞ்சாவைச் சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து, வெளிநாட்டுப் பயணியைக் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்தடைந்த விமானப் பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அப்போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் தனது சூட்கேஸுடன் சுங்கச் சோதனை பகுதியில் நிற்காமல் அவசரமாக வெளியேற முயன்றதால் அவர் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அந்த வாலிபரின் சூட்கேஸைத் திறந்து சோதனை செய்தபோது, அதற்குள் 'தாய்லாந்து நாட்டு உணவுப் பொருட்கள்' என லேபிள் ஒட்டப்பட்ட 26 காற்று புகாத பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் பாக்கெட்டுகளைப் பிரித்துச் சோதனை செய்தபோது, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டுப் பதப்படுத்தப்பட்ட 15 கிலோ எடையுள்ள உயர்ரக 'ஹைட்ரோபோனிக்' கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5 கோடியே 26 லட்சம் ஆகும்.
போதைப்பொருளைக் கடத்தி வந்த வாலிபரை உடனடியாகக் கைது செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், சென்னை நகரில் இதை யாரிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது மற்றும் இந்தச் கடத்தல் நெட்வொர்க்கின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தில் நடைபெற்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
