'கில்லி' படம் பார்த்துக் கொண்டே சிகிச்சை பெற்ற நோயாளி - சென்னையில் அதிநவீன 'ஹைப்பர்பாரிக்' சிகிச்சை மையம்!

 
கில்லி

சென்னையில் அதிநவீன அதி அழுத்த பிராண வாயு சிகிச்சை மையத்தைத் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று  திறந்து வைத்தார். இந்த மையத்தில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சலிப்படையாமல் இருக்கத் தொலைக்காட்சி பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதி அழுத்த பிராண வாயு சிகிச்சை முறையின் போது, நோயாளிகள் ஒரு பிரத்யேக உருளை வடிவ அறைக்குள் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் வரை படுத்திருக்க வேண்டும். இந்த நீண்ட நேரச் சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு ஏற்படும் பயம் மற்றும் சலிப்பைப் போக்குவதற்காக, அவர்கள் படுத்துக் கொண்டே தொலைக்காட்சி பார்க்கும் வகையில் அதிநவீனத் திரைகள் அந்த அறைகளுக்குள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மையத்தின் தொடக்க விழாவின் போது நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் சலிப்பின்றி இருக்கத் திரையில் தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த எக்காலத்திற்குமான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'கில்லி' திரையிடப்பட்டது. நோயாளி 'கில்லி' திரைப்படத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டே எந்தவித பதற்றமும் இன்றி மிக நிதானமாகத் தனது 2 மணி நேரப் பிராண வாயு சிகிச்சையைப் பெற்றுக் கொண்டார்.

தீராத சர்க்கரை நோய் புண்கள், தீக்காயங்கள், கார்பன் மோனாக்சைடு நச்சுப் பாதிப்பு மற்றும் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் குறைபாடு போன்ற தீவிரப் பிரச்சினைகளுக்கு இந்த அதி அழுத்த பிராண வாயு சிகிச்சை மிகச் சிறந்த தீர்வாக அமையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் இத்தகைய உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மருத்துவக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.