அரசுப் பள்ளிகளுக்கு ₹70 லட்சம் மதிப்பிலான 900 பெஞ்ச் டெஸ்க்குகள் வழங்கிய ஹுண்டாய் நிறுவனம்!
சென்னை மாவட்ட ஆட்சியரின் சிறப்பான முன்னெடுப்பில், பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ், ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் சார்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள 18 அரசுப் பள்ளிகளுக்கு ₹70 லட்சம் மதிப்பீட்டில் 900 புதிய பெஞ்ச் டெஸ்க்குகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
சென்னை எழும்பூர் மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த விழா நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய பெஞ்ச் டெஸ்க்குகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார். மேலும், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.
அரசுப் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் இந்த நற்பணியில் பல முக்கிய அதிகாரிகள் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாழ்த்தினர். பள்ளி கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் விழாவின் நிறைவாக நன்றியுரை ஆற்றினார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் ஹூ மின் ஹோ மற்றும் பெரு நிறுவன சமூகப் பொறுப்புத் துறையின் தலைவர் நரசிம்மன் ஆகியோர் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தனர். சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த முற்போக்கான கூட்டு முயற்சி, அரசுப் பள்ளிகளில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு வசதியான கற்றல் சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
