“உயிரோடு நலமாகத் தான் இருக்கேன்...” இறந்துவிட்டதாகப் பரவிய வதந்திக்கு நடிகை வடிவுக்கரசி முற்றுப்புள்ளி!

 
வடிவுக்கரசி

பிரபல மூத்த நடிகை வடிவுக்கரசி இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு அவர் நேரில் முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், தான் ஆரோக்கியத்துடனும் நலமுடனும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பிரபல நடிகை வடிவுக்கரசி இறந்துவிட்டதாகத் தகவல்கள் பரவின. இந்தச் செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வடிவுக்கரசி விளக்கம் அளித்துள்ளார். நேற்று வரை தான் படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்று வந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது நடிகர் பிரபுவின் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகக் காரைக்குடி செல்லத் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். தான் எந்தவித உடல்நலக்குறைவுமின்றி மிக நலமுடன் இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

தன் மீது இவ்வளவு அன்பையும் அக்கறையையும் பொழியும் ரசிகர்களுக்குத் தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறிய அவர், திரையுலகப் பயணத்தில் தான் இத்தனை மனிதர்களைச் சம்பாதித்து வைத்திருப்பதை நினைத்து பெருமிதம் கொள்வதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.