வயசாயிடுச்சு... பெற்ற தாயை ரயில் முன் தள்ளிக் கொன்ற மகன்... திருவள்ளூரில் பதறவைக்கும் சம்பவம்!
திருவள்ளூர் மாவட்டம் மணவூர் ரயில் நிலையத்தில், உடல்நலக்குறைவால் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த 72 வயது தாயை, பெற்ற மகனே ஓடும் ரயில் முன் தள்ளிக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி (72) என்பவர் உடல்நலக் குறைபாடு காரணமாகச் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று அவரது மகன் பார்த்தசாரதி, தாயை மணவூர் ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். எக்ஸ்பிரஸ் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த தருணத்தில், தண்டவாளத்தின் அருகே சக்கர நாற்காலியுடன் தாயை நிறுத்தி வைத்திருந்த பார்த்தசாரதி, எதிர்பாராத விதமாக ஓடும் ரயிலின் முன் அவரைப் பலவந்தமாகத் தள்ளிவிட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பத்மாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து பார்த்தசாரதியைக் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தாயைப் பராமரிக்க முடியாமலும், அதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலாலுமே இக்கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
