”நான் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை; என்னை அப்படி வளர்க்கவில்லை” - ஜாமீனில் வெளிவந்த பின் உதயநிதி பேட்டி!
தஞ்சாவூர் காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
"நான் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை; எனக்கு அப்படி ஒரு எண்ணம் துளியும் கிடையாது. என்னைப் பெற்ற தாய் தந்தையர் என்னை அப்படி வளர்க்கவில்லை" என்று அவர் கூறினார்.

"எனக்குத் திருமணமாகி ஒரு மனைவி இருக்கிறார்; அவருடன் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்களையும் எனது தாயாகவும், தங்கையாகவும் தான் நான் பார்க்கிறேன்" என விளக்கம் அளித்தார்.
"தவெக ஆட்சி அமைந்த பிறகு விவசாயிகளுக்கு இழைத்த துரோகங்களைப் பட்டியலிட்டு, மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததைச் சுட்டிக்காட்டித் தான் நான் பேசினேன். ஆனால், அதற்குப் பதில் சொல்ல வக்கில்லாதவர் தான் நமக்கு வாய்த்திருக்கிற டம்மி முதலமைச்சர்" எனச் சாடினார்.

"என்னை ஒரு தீவிரவாதியைப் போலக் கைது செய்து அழைத்துச் சென்றனர். காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காதது குறித்து முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். முழுக்க முழுக்க விவசாயத்தைப் பற்றியே பேசினேன்; ஆனால், ரீல்ஸ் போட்டு முதன்மைப் பிரச்சனையைத் திசைதிருப்பும் யுக்தியைத் தவெக அரசு பின்பற்றுகிறது" என்று குற்றம் சாட்டினார்.
