"மருந்துகளின் பக்கவிளைவால் சோர்வாக உள்ளேன்" - 'ஆட்டோ இம்யூன்' நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தகவல்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் தனது உடல்நிலை குறித்த அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் வரும் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களுக்குத் தனது தற்போதைய உடல்நிலை நிலவரத்தைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தனது நோய் பாதிப்பு குறித்து, "நான் கடந்த சில ஆண்டுகளாகவே 'ஆட்டோ இம்யூன்' எனப்படும் நோய் பாதிப்புக்கு ஆளாகி, அதற்கான தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறேன். இந்த நோய்க்காக நான் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் வீரியம் மற்றும் அதன் பக்கவிளைவுகள் காரணமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தற்பொழுது மிகவும் சோர்வாக உணர்கிறேன்." இந்த இக்கட்டான உடல்நிலையிலும் தனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் அவர் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைபாடுகள் இருந்தாலும், 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்திற்காக ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் தங்களின் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். அவர்களின் இந்த அர்ப்பணிப்பு தனக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது.
இத்தகைய சோர்வான காலக்கட்டத்திலும் ரசிகர்கள் என் மீது காட்டும் எல்லையற்ற அன்பும், பிரார்த்தனைகளும் மட்டுமே என்னை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி முன்னோக்கிச் செலுத்தப் பெரும் உதவியாக இருக்கின்றன.
ஏற்கனவே நடிகை சமந்தா உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்கள் இந்த ஆட்டோ இம்யூன் பாதிப்பில் இருந்து மீண்டு வரப் போராடி வரும் நிலையில், விஷ்ணு விஷாலின் இந்தத் திடீர் அறிக்கை அவரது ரசிகர்களிடையேயும், ஒட்டுமொத்தத் திரை உலகினரிடையேயும் பெரும் கவலையையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் முழுமையாகக் குணமடையப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
