“பாரதிதாசன் படிக்கத்தான் நான் அமைச்சர் ஆனேன்” - அமைச்சர் வன்னி அரசு பேட்டி!
மலேசியாவில் படித்து வரும் மாணவர் பாரதிதாசனின் கல்விச் செலவுக்குத் தமிழக அரசு முழுமையாக உதவும் என்றும், அவரது ஆராய்ச்சி படிப்புக்கான உதவித்தொகை இரண்டு நாட்களில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயின்று வரும் மாணவர் பாரதிதாசனுக்கு உதவித் தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் வன்னி அரசு விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதுடன், “பாரதிதாசன் படிக்கத்தான் நான் அமைச்சர் ஆனேன். அவர் படிப்புக்கு அரசு துணையாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
ஏற்கெனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாணவருக்கு ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதித் தொகை விரைவில் போய்ச் சேரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தம்பி பாரதிதாசனின் ஆராய்ச்சி படிப்புக்கான மீதமுள்ள உதவித்தொகை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் அரசு தொடர்ந்து உதவும் என்றும், புதிய அரசு அமைந்த பிறகு கல்வித்துறை சார்ந்த உதவித்தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
