அரசு வேலை கிடைக்கல... ஆளுநரிடம் தங்கப் பதக்கம் பெற்ற பொறியியல் வாலிபர் விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை!

 
உபி

 

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகர் கோவிந்த நகர்ப் பகுதியில் வசித்து வந்த ஆனந்த் குமார் 23 என்ற வாலிபர், அரசு வேலை கிடைக்காத கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படிப்பில் மாநில அளவில் 3-வது இடம் பிடித்துத் தேர்ச்சி பெற்றிருந்த இவர், கல்லூரி விழா ஒன்றில் உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேலிடம் இருந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திறமையான வாலிபரின் திடீர் விபரீத மரணம் அப்பகுதிப் பொதுமக்கள் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் அலாதியான சோகத்தையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய குடும்பத்தினர் தங்களின் மூத்த மகனின் திருமண வேலைகளுக்காகப் பீகாரில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்த வேளையில், 3 அடுக்குமாடிகளைக் கொண்ட வீட்டில் தனியாக இருந்த ஆனந்த் குமார் இந்த இறுதி முடிவை எடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அவரது அறையிலிருந்து உருக்கமான ஒரு தற்கொலைக் குறிப்பைக் கண்டெடுத்துக் கைப்பற்றியுள்ளனர். அந்தத் தற்கொலைக் கடிதத்தில் தனது தந்தையைக் குறிப்பிட்டு, தான் 50-க்கும் மேற்பட்ட முறை பல்வேறு அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதியும் எதிலும் தேர்ச்சி பெற முடியாததால் இந்த முடிவை எடுப்பதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் அவர் மிகவும் வேதனையுடன் எழுதியுள்ளார்.

The Spark — May 2026 | IIT Kanpur

இது குறித்து அவரது தந்தை ராஜ்குமார் கண்ணீர் மல்கக் கூறும்போது, தனது மகன் ரயில்வே, வங்கி மற்றும் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் நடத்திய போட்டித் தேர்வுகளில் தொடர்ந்து தீவிரமாகப் பங்கேற்று வந்ததாகத் தெரிவித்தார். இருப்பினும் அவற்றில் இறுதிவரை வெற்றி பெற முடியாததால் கடந்த சில மாதங்களாகவே அவர் கடுமையான மன உளைச்சலில் காணப்பட்டதாகக் கதறி அழுதுள்ளார்.