"நவராத்திரியில் கலந்துகொண்டதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்" - விஜயவாடாவில் தெலுங்கில் பேசி அசத்திய முதல்வர் விஜய் - முழு வீடியோ!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற ‘விஜயவாடா உத்சவ் 2.0’ கலாச்சார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்த தமிழக முதலமைச்சர் விஜய், அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். முன்னதாக, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து முக்கிய நதிநீர் இணைப்புத் திட்டங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திய அவர், புகழ்பெற்ற கனக துர்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனமும் செய்தார்.
தமிழக முதல்வர் விஜய், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அழைப்பின் பேரில், இரு மாநில வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்கும் விதமாக விஜயவாடாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். விஜயவாடா விமான நிலையத்திற்கு சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு ஆந்திர மாநில அரசு சார்பில் மிகச்சிறப்பான, உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு கனக துர்கை அம்மன் கோயிலுக்கு அவர் சென்றடைந்தார். அங்கு அவருக்குக் கோவில் நிர்வாகம். அர்ச்சகர்கள் தரப்பில் மேளதாளங்கள் முழுங்கச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, முறையான பூரணகும்ப மரியாதையுடன் கோயில் நுழைவு வாயிலில் வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நின்று கொண்டே மூலவர் கனக துர்கை அம்மனைத் தரிசித்து அவர் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.
கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்ட முதல்-அமைச்சர் விஜய், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் இணைப்புத் திட்டங்கள் மற்றும் மிக முக்கியமாகக் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் தொடர்பான திட்ட வடிவங்கள், இரு மாநிலங்களின் விவசாய நலன்கள் மற்றும் நீர் மேலாண்மைப் பரிமாற்றங்கள் குறித்து ஆழமான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
இரு மாநிலங்களின் முக்கிய விவகாரங்கள் குறித்த ஆலோசனைகளுக்குப் பிறகு, ஆந்திராவின் பாரம்பரிய மற்றும் கலாச்சாரப் பெருமையைப் பறைசாற்றும் விதமாக நடத்தப்பட்ட ‘விஜயவாடா உத்சவ் 2.0’ பிரம்மாண்ட நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் விஜய் மற்றும் உடன் சென்ற தமிழக அமைச்சர்களுக்கு ஆந்திர அரசு சார்பில் சிறப்பு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டுப் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
விழாவில் மேடையேறி உரையாற்றிய முதல்-அமைச்சர் விஜய், ஆந்திர மக்களின் அன்பையும் விருந்தோம்பலையும் வெகுவாகப் பாராட்டினார். அவர் தனது உரையில் "அனைவருக்கும் என் இதயப்பூர்வமான வணக்கம். உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்து இந்த திருவிழாவில் கலந்துகொண்டதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. எனக்கு இங்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளித்துள்ள ஆந்திர மாநில மக்களுக்கும், அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இந்த புனிதமான நவராத்திரி விழாவில் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்ததை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.

மேலும், தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களின் சமகால வளர்ச்சி, நல்வாழ்வு மற்றும் முன்னேற்றம் குறித்து ஆந்திர முதலமைச்சர் மரியாதைக்குரிய சந்திரபாபு நாயுடு அவர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆந்திர மக்களின் சிறப்பான விருந்தோம்பலும் அன்பும் என்னை நெகிழச் செய்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து தனது உரையைத் தெலுங்கு மொழியில் தொடங்குகையில் அங்குள்ள மக்களைப் பெரிதும் ஈர்த்த அவர், தனது உரையின் நிறைவுப் பகுதியைத் தமிழில் பேசி முடிக்க, அரங்கம் முழுவதும் பெரும் ஆரவாரமும் கைதட்டல்களும் எதிரொலித்தன. தமிழக முதல்-அமைச்சரின் இந்த ஆந்திரப் பயணமும், இரு மாநிலத் தலைவர்களின் சந்திப்பும் தென்னிந்திய அரசியல் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தில் மிக முக்கியமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.
