"பேசாமல் இந்தியாவிலேயே இருந்திருக்கலாம்" - துபாய் வாழ்க்கை குறித்து இளைஞர் வெளியிட்ட வைரல் வீடியோ!
வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என்ற கனவுடன் துபாய்க்குச் சென்ற சமையல் கலைஞர் ஒருவர், அங்குள்ள அதிகப்படியான வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் திணறும் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராகுல் பாலா, வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை நனவாக்கி துபாய்க்குச் சென்றுள்ளார். அங்குச் சென்ற பிறகே, அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லத் திட்டமிடும் இந்தியர்கள் அனைவரும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அறிவுறுத்தியுள்ளார்.
துபாய் திரஹாமை இந்திய ரூபாயாக மாற்றும் போது பெரிய தொகையாகத் தெரிந்தாலும், அங்கே தங்கிச் செலவழிக்கும் போது தான் பணத்தின் உண்மையான மதிப்பு புரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக, 2,500 திரஹாம் சம்பளம் (சுமார் ரூ.65,168) கிடைத்தாலும், தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகள் போக கையில் மிஞ்சும் சேமிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பதிவிற்குப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் துபாய் வாழ்க்கை நரகமானது என ஆதரவு தெரிவித்தாலும், மற்றும் சிலர் ஆரம்பக் கடினங்களை உழைப்பால் தாண்டி முன்னேறலாம் என அவருக்கு ஆறுதலும் ஊக்கமும் அளித்து வருகின்றனர்.
