“அமைச்சர் பதவி கேட்கவில்லை..” - பாமக தலைவர் அன்புமணி விளக்கம்!
தவெக கூட்டணியில் பாமக இணைய இருப்பதாகவும், அமைச்சர் பதவி கோரப்பட்டுள்ளதாகவும் பரவி வரும் தகவல்களில் எந்தவொரு உண்மையும் இல்லை எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தவெக கூட்டணியில் பாமக இணையப் போவதாகவும், தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கோரியிருப்பதாகவும் வெளிவரும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை மற்றும் வதந்திகள் தான் என்று தெளிவுபடுத்தினார்.

தான் எப்போதுமே அமைச்சர் பதவியைக் கேட்டதுமில்லை, எதிர்காலத்தில் கேட்கப் போவதும் இல்லை என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார். இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்த பல்வேறு ஊகங்கள் உலாவி வரும் நிலையில், அன்புமணி அவர்களின் இந்த நேரடியான விளக்கம் தற்போதைய அரசியல் களத்தில் நிலவிவந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
