கழுத்தில் தாலி கூட ஏறலை... முன்னாள் காதலன் செய்த அதிர்ச்சி காரியம்... புதுமணப்பெண் தற்கொலை!
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம், சிந்தகி தாலுகா பந்தலா கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (22) என்ற இளம் பெண், தனது முன்னாள் காதலனின் வன்மமான செயலால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
ஜெயஸ்ரீக்கு வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி திருமணம் நடத்தப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் இரு வீடுகளிலும் கோலாகலமாக நடைபெற்று வந்தன. புதிய வாழ்க்கையைத் தொடங்க ஜெயஸ்ரீ ஆவலுடன் காத்திருந்தார். ஜெயஸ்ரீக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தகவலறிந்த அவரது முன்னாள் காதலன் ஸ்ரீசைல், இத்திருமணத்தைத் தடுத்து நிறுத்தத் திட்டமிட்டுள்ளார்.

ஜெயஸ்ரீயும் தானும் முன்பு ஒன்றாக இருந்தபோது எடுத்த தனிப்பட்ட புகைப்படங்களை, மணமகன் வீட்டாருக்கு ஸ்ரீசைல் சமூக வலைதளம் மூலம் அனுப்பியுள்ளார். புகைப்படங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார், உடனடியாகத் திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்தனர்.
நிச்சயிக்கப்பட்ட திருமணம் பாதியில் நின்றதாலும், புகைப்படங்கள் வெளியானதாலும் ஜெயஸ்ரீ கடும் மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் ஆளானார். ஊர் மக்கள் மற்றும் உறவினர்களுக்கு முகம் காட்ட அஞ்சிய அவர், இன்று அதிகாலை ஊர்க் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிந்தகி போலீசார், ஜெயஸ்ரீயின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்குத் தூண்டியதாக ஸ்ரீசைல் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண்ணின் எதிர்காலத்தைப் பழிவாங்கும் நோக்கில் சீரழித்த இந்தச் சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
