“என் குழந்தை கிடையாது...” டிஎன்ஏ பரிசோதனை கோரிய தந்தைக்கு ரூ.50,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மனைவிக்குப் பிறந்த குழந்தை தனக்குப் பிறந்ததல்ல என்று கூறி டிஎன்ஏ பரிசோதனை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தாமதமாக மனுத் தாக்கல் செய்ததோடு, குடும்பப் பிரச்சினையில் குழந்தையைப் பகடைக்காயாகப் பயன்படுத்திய தந்தைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவிக்கு நியாயப்படி பிறந்த குழந்தை தனக்குப் பிறந்தது இல்லை என்று சந்தேகம் தெரிவித்து, அதுகுறித்த உண்மையை அறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷமீம் அகமது பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பதிவு செய்தார்.

குழந்தை பிறந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்த நிலையில், எவ்விதமான வலுவான ஆதாரங்களும் இன்றி தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது.
கணவன் - மனைவி இடையேயான குடும்பச் சண்டைகள் மற்றும் ஈகோ பிரச்சினைகளில் குழந்தைகளைப் பாதுகாப்பான ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு செய்வது குழந்தையின் மனநலனை மோசமாகப் பாதிக்கும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்த நீதிபதி, தேவையில்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்கும், குடும்ப உறவுகளின் மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்டதற்கும் தண்டனையாக மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
