"அடுத்த 5 ஆண்டுகள் உழைக்கத் தெம்பில்லை" - திமுக நிர்வாகிகள் கண்ணீருடன் ராஜினாமா செய்த வீடியோவால் தலைமை அதிர்ச்சி!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக கட்சியை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் திமுக கள ஆய்வுக்குழுவினர் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின் போது, கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மனக்குமுறல்களுடன் கண்ணீர்விட்டு அழுது தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் தற்போது திமுக தலைமைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
திமுக கள ஆய்வுக்குழுவினர் மாவட்ட வாரியாகத் தங்களது தற்போதைய ஆய்வை முடித்து, அது குறித்த விரிவான ரகசிய அறிக்கையையும், களத்தில் சேகரிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கியுள்ளனர்.
அந்த வீடியோக்களில், பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த திமுகவின் முக்கிய மற்றும் அடிமட்ட நிர்வாகிகள் பலர், தற்போதைய தேர்தல் தோல்வியால் ஏமாற்றமடைந்து கண்ணீர் மல்கப் பேசியுள்ளனர். "தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான த.வெ.க-விடம் தோல்வியடைந்த பிறகு, எங்களால் உடனடியாக மீண்டு வர முடியவில்லை. அடுத்த 5 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்து மீண்டும் உழைப்பதற்கு எங்களிடம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எவ்விதத் தெம்பும் இல்லை" எனக் கூறி அவர்கள் தங்களது பொறுப்புகளைக் கண்ணீருடன் ராஜினாமா செய்துள்ள காட்சிகள் தலைமையைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
மேலும், அந்த கள ஆய்வு அறிக்கையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மீது நிர்வாகிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கட்சி சார்பாக நடத்தப்படும் எந்தவொரு போராட்டங்களுக்கும் அல்லது நிகழ்ச்சிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
"களத்தில் நின்று உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்குக் கட்சியில் எவ்வித மதிப்பும், மரியாதையும் இல்லை. மாவட்ட அளவில் நிலவும் இந்த கோஷ்டி பூசல்கள்தான் தேர்தல் தோல்விக்கு முதன்மைக் காரணம்" என்று அவர்கள் குமுறியுள்ளனர்.
மாவட்ட அளவிலான பிரச்சினைகளைத் தாண்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமை நிர்வாகிகளும் தங்களின் நியாயமான மனக்குமுறல்களைக் காது கொடுத்துக் கேட்பதில்லை என்றும், தொண்டர்களின் உணர்வுகளை முற்றிலும் மதிக்காமல் அலட்சியப்படுத்துவதாகவும் அந்த வீடியோ பதிவுகளில் நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடிமட்டத் தொண்டர்களின் இந்த மனக்குமுறல்களும், தொடர் ராஜினாமாக்களும் திமுகவின் உள்கட்டமைப்பில் தற்போதைய சூழலில் பெரும் பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளதை இந்த கள ஆய்வு அறிக்கை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ந்துபோன மு.க.ஸ்டாலின், கட்சியை உடனடியாகச் சீரமைக்கக் கடுமையான முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
