"வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை" - வருத்தம் தெரிவித்தார் ஆ.ராசா!
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியபோது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய விவகாரத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை எனவும் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக தலைவர்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்துச் சென்னை சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆ.ராசா, அரசியல் விமர்சகர் ஒருவரைக் கடுமையாகச் சாடியதுடன், சர்ச்சைக்குரிய மற்றும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருந்தார்.

ஆ.ராசாவின் இந்தப்பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் விவாதத்தையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரிடமிருந்தும் இதற்குத் தீவிர கண்டனங்கள் எழுந்தன.
இதனையடுத்து, தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள ஆ.ராசா, தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் அடையாளத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு பொய்யாகக் கொச்சைப்படுத்தியதால் ஏற்பட்ட வலியை வெளிப்படுத்தும் விதமாகவே அந்த உணர்ச்சி உந்தப்பட்டதாகவும், அந்தக் கேள்விகளால் தனக்கும் வருத்தம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் தனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள அவர், "நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" என்றும் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.
