ஆம்பள புள்ள இல்ல... வரதட்சிணை வாங்கிட்டு வா... காதல் மனைவியை அடித்து சித்ரவதை செய்த தவெக பிரமுகர்!

 
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள சின்னகாக்காவேரி புதுகாலனியைச் சேர்ந்த மீனா என்பவர், தனது கணவர் ஜெகதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டுத் தன்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி, உடல்ரீதியாகத் தாக்கியதாகப் போலீசில் பரபரப்புப் புகாரளித்துள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் தற்பொழுது ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சொட்டு நீர் பாசன அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் 35 வயது ஜெகதீஷ்குமார், தமிழக வெற்றிக் கழகத்தின் சீராப்பள்ளி பேரூர் துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

பாலியல் வன்கொடுமை பலாத்காரம் மனைவி தகராறு தம்பதி சண்டை

இவர்கள் இருவரும் தீவிரமாகக் காதலித்து, பெற்றோரின் முழுச் சம்மதத்துடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்குத் தற்பொழுது 12 மற்றும் 6 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததிலிருந்து, தங்களுக்கு ஆண் வாரிசு இல்லை என்பதை முதன்மைக் காரணமாகக் கூறி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மீனாவைத் துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும், திருச்செங்கோடு அம்மாசிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஜெகதீஷ்குமாருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதுடன், அவரை வீட்டிற்கே அழைத்து வந்து மனைவியை அவமதித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார்.

கணவர் அரசியல் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருப்பதால், புகார் அளித்தும் இதுவரை நாமகிரிப்பேட்டை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மீனா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கட்சியின் பெயரைப் பயன்படுத்தித் தன்னை மிரட்டும் கணவரைத் தவெக தலைவர் விஜய் நேரில் கண்டிக்க வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். எனக்கும், என் 2 மகள்களுக்கும் உரிய நீதி கிடைக்காவிடில் தற்கொலை செய்து கொள்வோம் என்றும், வரதட்சணைக் கொடுமை செய்யும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிங்கப்பெண் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.