"தில் இருக்கா... திராணி இருக்கா... it's very wrong bro!!" - முதல்வர் விஜய்க்கு ஜெயக்குமார் கண்டனம்!
"கரூரில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களிடம் பொதுவெளியில் ஒரு மன்னிப்பு கூடக் கேட்காமல், 'தில் இருக்கா, திராணி இருக்கா' என அநாகரீகமாகப் பேசி, மக்களைத் தொடர்ந்து ரசிக மனநிலையிலேயே வைத்திருக்க முதலமைச்சர் விஜய் விரும்புகிறார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனத்தை முன்வைத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் இன்றைய கரூர் பயணத் திட்டம் மற்றும் அங்கு அவர் ஆற்றிய உரையை விமர்சித்து, அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், கரூர் மக்களைச் சந்திக்கச் செல்வதாகக் கூறிய முதலமைச்சர் விஜய், உண்மையில் அங்கு வரவிருக்கும் இடைத்தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்யவே சென்றுள்ளார். ஏற்கனவே ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அள்ளி வீசிய கவர்ச்சி வாக்குறுதிகளை, மீண்டும் ஒருமுறை அங்கு வாக்குறுதிகளாக முழங்கியுள்ளார்.
தன் மீதுள்ள தவறுகளை உணராமல், தொடர்ந்து காவல்துறை மீது பழி போடுவதையும், பஞ்ச் டயலாக் பேசுவதையும் முதலமைச்சர் வழக்கமாகக் கொண்டுள்ளார். "தில் இருக்கா, திராணி இருக்கா, ஒரு ****** உம் கிடையாது" என்று மேடைகளில் அநாகரீகமாகப் பேசுவது அவரது டிரேடு மார்க் பேச்சாக மாறிவிட்டது என ஜெயக்குமார் சாடியுள்ளார்.
கரூர் சென்றுள்ள முதல்வர், வழக்கம் போல தன் வசன கர்த்தா குடுத்த Script ஐ முழங்கி தள்ளியுள்ளார்.
— DJayakumar (@djayakumaroffcl) July 10, 2026
என் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் கரூர் மக்களை சந்திக்க போகிறேன் என்று சொன்ன முதல்வர், உண்மையில் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யவே கரூர் சென்றிருக்கிறார். மேலும் ஆட்சிக்கு வந்தால்… pic.twitter.com/TM3MLvOaE2
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்திற்குத் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கு ஜெயக்குமார் தனது பாணியில் ஆங்கிலத்தில் விமர்சித்துள்ளார்.
"நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் என்று சொல்லும் முதலமைச்சருக்கு, தன்னை பார்க்க வந்து இறந்தவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தாருக்கோ பொதுவெளியில் ஒரு மன்னிப்பு கேட்கக் கூட மனது வரவில்லை. நடிகரைப் பார்க்க வந்து இறந்தவர்களுக்கு நினைவு மண்டபமும், உறவினர்களுக்கு அரசு வேலையுமா? What bro, it's very wrong bro!! மக்களை ஏமாற்றவே இந்த ஏமாற்றம்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், தீர்ந்து போன சக்தியிடம் இருந்து தவெக எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் பேசி ஆள் பிடிக்கும் முதலமைச்சர், தங்களது கட்சியினர் செய்யும் முறைகேடுகள் நாள்தோறும் செய்திகளில் வருவதைக் கவனிப்பதில்லை என்றும் சாடியுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர், "விஜய்யின் முதுகு தான் நினைவுச்சின்னம்" என்று விமர்சித்த சில மணி நேரங்களிலேயே, அதிமுக தரப்பிலிருந்து ஜெயக்குமாரும் முதலமைச்சருக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் கரூர் அரசு விழாக்கள் மற்றும் 10 கி.மீ தூரப் பிரம்மாண்ட ரோடு ஷோ பேரணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், எதிர்க்கட்சிகளின் இந்தக் கடுமையான விமர்சனங்களால் ஆங்காங்கே அரசியல் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், கரூர் மற்றும் சென்னை தலைமைச் செயலகப் பகுதிகளில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏதும் வெடிக்காமல் தடுக்க, அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் தீவிரப் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பொதுக்கூட்ட மைதானங்களின் நுழைவாயில்களில் போலீசார் தங்களது கண்காணிப்பை மேலும் பலப்படுத்தியுள்ளனர்.
