“வாரியத் தலைவர் பதவியே வேண்டாம்..” - பின்வாங்கிய திருமாவளவன்.. அதிருப்தியில் தொண்டர்கள்!
கூட்டணி அரசில் விசிகவிற்கு வழங்கப்பட உள்ள வாரியத் தலைவர் பதவிகளுக்கான பரிந்துரைகளில் உட்கட்சி மோதல் வெடித்ததைத் தொடர்ந்து, தலைவர் தொல்.திருமாவளவன் அந்தப் பதவியே வேண்டாம் எனத் பின்வாங்கியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவின் சார்பில் வன்னி அரசு அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், அமைச்சர் பதவியுடன் கூடுதலாகச் சில வாரியத் தலைவர் பதவிகளையும் வழங்குவதாகத் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரியத் தலைவர் பதவிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு பெயரையும், அமைச்சர் வன்னி அரசு மற்றொரு பெயரையும் பரிந்துரைத்தனர். ஆனால், விசிக தலைவர் திருமாவளவனோ சிந்தனை செல்வன் பெயரை முன்மொழிந்தார். இதனால் வன்னி அரசு மற்றும் சிந்தனை செல்வன் தரப்பினரிடையே மோதல் போக்கு வெடித்தது.
கட்சியில் மோதல் முற்றுவதைத் தவிர்க்கும் வகையில், "இந்த வாரியத் தலைவர் பதவியே நமக்கு வேண்டாம்" எனத் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. கட்சியின் முடிவால் விசிகவினர் மத்தியில் அதிருப்தியும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.
