"அப்பா இல்லாத உலகில் நான் இருக்க விரும்பலை"... வாலிபர் விபரீத முடிவு!
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே, தந்தை இறந்த சோகத்தைத் தாங்க முடியாமல் வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாசரேத்தை அடுத்த வெள்ளமடம் சுப்ரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (27) என்பவரே, தந்தை மீது கொண்ட அதீத பாசத்தால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். ஜெயராஜின் தந்தை ஆசீர் கனகராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். தந்தையின் இழப்பு ஜெயராஜை மனரீதியாகப் பெரிதும் பாதித்துள்ளது. அந்தத் துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த அவர், நாளடைவில் மதுப்பழக்கத்திற்கும் அடிமையானதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று தனது தாயாரிடம், "தந்தை இல்லாத இந்த உலகில் எனக்கு இருக்க விருப்பமில்லை" என்று கூறிவிட்டு ஜெயராஜ் அறைக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் உறவினர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது, ஜெயராஜ் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த நாசரேத் போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஜெயராஜின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மன உளைச்சலில் இருந்த ஒரு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
