”எங்க அப்பா மரணத்துல சந்தேகம் இருக்கு”.. புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுத்து ஆய்வு...!!

 
முருகேசன்

உயிரிழந்து இடுகாட்டில் புதைக்கப்பட்ட நபரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள ராயர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனக்குச் சொந்தமான நிலத்தில், கடந்த திங்கள்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, அவரது உடலை உறவினர்கள் எடுத்துச் சென்று, சடங்குகள் செய்து, மறுநாள் அடக்கம் செய்துள்ளனர்.

 உயிரிழந்த  முருகேசன்

இந்நிலையில் உயிரிழந்த முருகேசனின் இளைய மகன் இளையபெருமாள் சின்னசேலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "தனது தந்தையை அடக்கம் செய்வதற்கு முன், அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டதைப் போன்ற சில தழும்புகள் இருந்தன. அப்போது இருந்த பதற்றத்தில் என்ன செய்வது என்று புரியாமல் உடலை இடுகாட்டில் புதைத்து விட்டோம். பின்னர் எங்கள் வயலுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மான்கள் தொந்தரவு காரணமாக, எங்கள் நிலத்திற்கு அருகில் உள்ளவர் மின்வேலி அமைத்து இருந்தது தெரிய வந்தது. ஒருவேளை அந்த மின் வேலியில் அடிபட்டு, இறந்த தனது தந்தையைத் தூக்கிக்கொண்டு வந்து, எங்கள் நிலத்தில் போட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

பிரேதப் பரிசோதனை செய்த போது

மேலும், இடுகாட்டில் புதைத்த தனது தந்தையின் உடலைத் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனை செய்து, இறப்புக்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு கூறியிருந்தார். இதனையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் இன்று நேரில் வந்து சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் வருவாய்த் துறையினர், மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடுகாட்டில் புதைக்கப்பட்டவரின் உடலைத் தோண்டி எடுத்து, இடுகாட்டிலேயே உடலை வைத்து பிரேதப் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படும் என மருத்துவ வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

From around the web