“9 போர்களை நிறுத்திவிட்டேன்... இது 10-வது!” - இஸ்ரேல்-லெபனான் இடையே போர்நிறுத்தம் - ட்ரம்ப் அறிவிப்பு!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் கொழுந்து விட்டு எரிந்த போர் நெருப்பை அணைக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் தற்காலிகப் போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, அதற்குப் பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இந்தச் சூழலில், டிரம்பின் நேரடித் தலையீடு ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப்

வாஷிங்டன் டி.சி.யில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், “லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் நான் நடத்திய தீவிரமான பேச்சுவார்த்தையின் பலனாக இந்தத் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க உதவும்” எனத் தெரிவித்தார். சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் வாஷிங்டனில் சந்தித்துப் பேசியது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப்

இந்த அமைதி முயற்சியில் அமெரிக்கத் துணை ஜனாதிபதி வான்ஸ், வெளியுறவுத் துறை மந்திரி ரூபியோ மற்றும் அமெரிக்கப் படைகளின் தலைமைத் தளபதி டேன் கெயின் ஆகியோர் இணைந்து பணியாற்றியதை டிரம்ப் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். “உலகம் முழுவதும் இதுவரை 9 போர்களை நிறுத்தியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இது நான் நிறுத்தப்போகும் 10-வது போர். நீண்ட கால அமைதியை நிலைநாட்ட நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்” எனத் தனது பாணியில் நம்பிக்கைத் ததும்பப் பேசினார் டிரம்ப். இந்த 10 நாள் போர்நிறுத்தம், மத்திய கிழக்கில் ஒரு நிரந்தர அமைதிக்கு வித்திடுமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.