“மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கிறேன்”... - பகிரங்க மன்னிப்பு கோரினார் இயக்குநர் மிஷ்கின்!

கடந்த வாரம் முழுவதும் சீமானின் பெரியார் குறித்த சர்ச்சையை விட இயக்குநர் மிஷ்கின் மேடையில் பேசிய ஆபாச வார்த்தைகள் அதிக கண்டனங்களைக் குவித்தது. பொது மேடையில் தன் பேச்சுக்கு சுவாரஸ்யம் சேர்ப்பதாக நினைத்து இஷ்டத்திற்கும் உளறிக் கொட்டிக் கொண்டிருந்த மிஷ்கினை, விழாவில் பங்கேற்ற பிரபலங்களும் கூட கண்டிக்கவில்லை. இத்தனைக்கும் இது குறித்து எந்த பத்திரிக்கையாளராவது அப்போதே குரல் எழுப்பி இருக்க வேண்டுமே? ஊஹூம்.
அதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் இந்த பேச்சு வைரலாகி கடும் கண்டனங்களைக் குவித்த போது பலரும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர். திரையுலகில் இருந்து முதல் ஆளாக பாடலாசிரியை தாமரை, பிரபலம் என்றால் என்ன வேண்டுமென்றாலும் பேசலாமா? என்று தனது முகநூல் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் ‘பாட்டல் ராதா’ மேடையில் பேசியது குறித்து மன்னிப்புக் கேட்டது மட்டுமன்றி தன் தரப்பு நியாயங்களையும் எடுத்துரைத்தார் இயக்குநர் மிஷ்கின்.
இந்த ‘பேட் கேர்ள்’ பட விழாவில் கலந்துக் கொண்ட மிஷ்கின், அதில் பேசும்போது ‘பேட் கேர்ள்’ படத்தைப் பற்றி பேசிவிட்டு, “அனைவரும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார்கள் என்று தொடங்கினார். அதன் பின்னர், “முதல் ஆளாக பாடலாசிரியர் தாமரையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவர் என்னைப் பற்றிய விமர்சனத்தில், நான் வெற்றி பெற்றுவிட்டதால் இப்படி பேசுகிறேன் என்று கூறியிருந்தார். வெற்றி என் தலை மீதிருந்தால் பெரிய ஆட்களுடன் படம் செய்திருக்க வேண்டும். அதனால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
பின் இயக்குநர் லெனின் பாரதி விமர்சித்திருந்தார். தத்துவ ரீதியாக விமர்சித்திருந்தார். அவரிடமும் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். என்னை திட்டி நடிகர் அருள்தாஸ் பிரபலமாகவே ஆகிவிட்டார். அவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய தயாரிப்பாளர் தாணுவிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன்.
என் மீது செருப்பை எறிய வேண்டும் என்று கூறிய நண்பரிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். அன்று மேடையில் இருந்த வெற்றிமாறன் மற்றும் அமீர் இருவரும் சிரித்தார்கள் என்று பலரும் திட்டினார்கள். ஜோக்காக பேசியது, இரண்டு மூன்று வார்த்தை மேலே போய்விட்டது அவ்வளவே. மனதில் இருந்து பேசியதால் அப்படி ஆகிவிட்டது என்பதால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னைப் பற்றி விஷால் மோசமாக பேசும் போது கூட, மேடையில் விஷாலைப் பற்றி பேசும் போது கூட வசை வார்த்தைகளால் பேசவில்லை.
ஒரு படத்தின் மேடையில் அதைப் பற்றி பேசும் போது, என் மனதில் ஆழத்தில் இருந்து தான் பேசுவேன். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஒரு படம் வந்தது. அதைப் பற்றி யாரேனும் விமர்சனம் செய்தார்களா? என்னைப் பற்றி தெரிய வேண்டுமென்றால் என் படங்களைப் பார்த்தால் போதும். என் படங்கள் சமூக கருத்துகள் சொல்லவில்லையா? அதில் பேரன்பு இல்லையா?. கமல் சாரிடம் போய்விட்டு திரும்ப வந்துவிட்டேன். ரஜினி சாரிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. நான் செல்லவில்லை.
மனிதர்களையும், பிராணிகளையும் நேசிப்பவன் நான். சினிமாவையும், சினிமா மேடையையும் நேசித்துக் கொண்டே இருக்கிறவன். அதைத் தாண்டி வேறு வேலையே இல்லை. ஒவ்வொரு தருணத்திலும் துரோகத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன். எப்படி என்னால் சக மனிதனைப் பார்த்து அவ்வாறு பேச முடியும்.
ஒரு விழாவில் பேசி கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று விரும்பினேன். என்னிடம் 40 ஆண்டுகளுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் இருக்கிறது. அவ்வளவு மனிதர்களை நேசிக்க வேண்டியது இருக்கிறது, நிறைய ஊர்களுக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. உங்கள் அனைவரின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு, உங்களை கடவுள் ஆக்குகிறேன்” என்று மிஷ்கின் மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!