"எனது கருத்தை திரும்ப பெறுகிறேன்... திருமா பேச்சு தூக்கிவாரி போட்டது" - வைகோ வருத்தம்!

 
வைகோ அழைப்பு

அதிமுக, திமுக, தவெக எனத் தமிழக அரசியல் களம் பலமுனைப் போட்டிகளாக மாறியுள்ள சூழலில், திமுக கூட்டணியில் நீடிக்கும் விசிக மற்றும் தவெக இடையேயான நெருக்கம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் குறித்துத் தான் செய்த கிண்டலான விமர்சனத்தைத் திரும்பப் பெறுவதாகவும், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் வைகோ அறிவித்துள்ளார்.

தென்காசியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துத் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

"தவெக அமைச்சரவையில் விசிக பங்கு வகித்துக் கொண்டே, மறுபுறம் திமுகவுடனான தங்களது நட்பும் தொடரும் எனத் திருமாவளவன் கூறியது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அரசியல் களத்தில் வட துருவமும், தென் துருவமும் எப்படி ஒன்று சேர முடியும்? திமுகவும், தவெகவும் ஒரே அணியில் இணைய வேண்டும் எனத் திருமாவளவன் பேசியது எனக்கு உண்மையிலேயே தூக்கிவாரி போட்டது."

முன்னதாக, திருமாவளவனின் இந்த 'பேலன்சிங்' அரசியல் உத்தியைக் கிண்டல் செய்யும் விதமாக, "திருமாவின் இத்தகைய கருத்திற்கு நோபல் பரிசு தான் கொடுக்க வேண்டும்" என வைகோ விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் விசிக தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், வைகோ அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

"திருமாவுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று நான் கூறிய கருத்தை  திரும்பப் பெறுகிறேன். திருமாவளவன் எனக்கு மிகவும் நெருங்கிய, அன்பான நண்பர். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அப்படிப் பேசவில்லை. குறிப்பாகத் திருமாவை காயப்படுத்தும் எண்ணம் எனக்குச் சிறிதும் இல்லை. அவர் மீது எனக்கு எவ்வித கோபமோ, மனக்கசப்போ கிடையாது."

"திருமா பற்றிய எனது இந்த விமர்சனத்தால் அதிருப்தியடைந்த விசிக எம்பி ரவிக்குமார், எனது 'சங்கொலி' பத்திரிகையின் சிறப்பு நிகழ்ச்சிக்கு வர இயலாது என தெரிவித்துவிட்டார். என் கருத்து அவரது மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமாவின் அரசியல் வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்கபலமாகவே இருப்பேன்" என்றார்.